குஜராத் விவகாரம் – சோ
‘என்கௌன்டர் என்கிற பெயரில் குஜராத் போலீஸ், சோராபுதீன் என்பவரை கொலை செய்தது; இதை ஏற்பாடு செய்தவர் அம்மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா; அவர் கொலைக்குற்றம் செய்தவர் ஆகிறார்...’ என்று கூறி ஸி.பி.ஐ. குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்திருக்கிறது. அதற்கு முன்பாக கைதாகி, சில ஆண்டுகளாக சிறையிலிருக்கும், பல போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இது ஒன்றுதானா என்கௌன்டர் ?

பல ஆண்டுகளாகவே, பல மாநிலங்களில் என்கௌன்டர்கள் நடப்பதும், போலீஸார் செய்த கொலைகளே அவை என்ற புகார்கள் எழுவதும், பின்னர் இந்த விவகாரங்கள் மறக்கப்படுவதும் நமக்குப் பழகி விட்ட விஷயங்கள். பழைய நிகழ்ச்சிகளை விட்டு விட்டு சமீபத்திய நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

2002-லிருந்து 2006 வரை நாட்டில் நடந்த என்கௌன்டர்கள் மொத்தம் 712. இவற்றில் 440 என்கௌன்டர்கள் (போலியானவை என்ற புகார்கள்) பற்றிய விசாரணை, தேசிய மனித உரிமைக் கமிஷன் முன்பு இருக்கிறது - என்பது 2006 மார்ச் மாத நிலவரம். இவற்றில் குஜராத் தொடர்புடையவை ஐந்தே ஐந்துதான். உத்திரப் பிரதேசம் - 230; மஹாராஷ்ட்ரம் - 30; ஆந்திரப் பிரதேசம் - 20; அஸ்ஸாம் - 12... என்று இந்தக் கணக்கு போகிறது. இந்த மற்ற என்கௌன்டர்கள் பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறை இல்லை.

தேசிய மனித உரிமைக் கமிஷன் முன் இருக்கும் நூற்றுக்கணக்கான என்கௌன்டர்கள் பற்றியோ, மொத்தமாக உள்ள 712 என்கௌன்டர்கள் பற்றியோ, புகார்கள் இருந்தாலும் விசாரணை கிடையாது; நீதிமன்ற உத்திரவும் கிடையாது; ஸி.பி.ஐ.யும் கிடையாது. ஆனால், குஜராத் என்கௌன்டர் பற்றி மட்டும் விசாரணை அது இது என்று அமர்க்களப்படுகிறது. ஏன்? ‘நீதிமன்றம் உத்திரவிட்டது; அதுதான் காரணம்’ என்பது ஒரு பதிலாகக் கூறப்படலாம். அது எப்படிப்பட்ட பதிலாக இருக்கும்?

நீதிமன்றத்திற்குச் செல்கிற மனித உரிமைக்காரர்கள் குஜராத்தைக் குறி வைக்கும்போது, அவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வேண்டியவர்களாகி விடுகிறார்கள். அவர்களுடைய புகார்களை காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் எடுக்கிற நிலை, சுப்ரீம் கோர்ட்டில் அரசு எடுக்கிற நிலையாகி விடுகிறது. அப்படியிருக்க, சுப்ரீம் கோர்ட்டில் ‘சோராபுதீன் என்கௌன்டர் பற்றி ஸி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்று மனித உரிமைக்காரர்கள் கோருகிறபோது, அதை அரசு எதிர்க்கப் போகிறதா என்ன?

நீதிமன்ற உத்திரவு...
இந்தச் சூழலில், சுப்ரீம் கோர்ட்டில் திரு. சாட்டர்ஜி எனும் நீதிபதியின் முன்பு ஒரு பொதுநல வழக்கில், ‘சோராபுதீன் என்கௌன்டர் பற்றி ஸி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. (நீதிபதி திரு.சாட்டர்ஜி, பிராவிடண்ட் ஃபண்ட் வழக்கில் குறிப்பிடப்பட்ட நீதிபதிகளில் ஒருவர். அவர் பொதுநல வழக்கில் கோரப்பட்டபடி, ஸி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட்டார். உடனே, பிராவிடண்ட் ஃபண்ட் வழக்கிலிருந்து அவர் பெயர் நீக்கம் பெற்றது. இதேபோல, குஜராத் கலவரங்கள் பற்றி விசேஷ விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று உத்திரவிட்ட நீதிபதி, அடுத்த சில தினங்களில் ஓய்வு பெற்று, காம்பெடிஷன் கமிஷன் தலைவராக நியமனம் பெற்றார். இதை வைத்துக் கொண்டு நீதிபதிகளின் நோக்கம் பற்றி நாம் ஏதும் கூறுவதாக நினைத்து விடக் கூடாது. ஆனால், நிகழ்ச்சிகள் நடக்கிற வேகத்தைப் பார்க்கிறபோது நமக்கு ஒன்று புரிகிறது.
சில நீதிபதிகள் அளிக்கிற தீர்ப்புகள் அரசுத் தரப்புக்கு பிடித்த தீர்ப்புகளாக இருந்தால், அவற்றை அளித்த நீதிபதிகளுக்கு அரசு ஏதாவது ‘மரியாதை’ செய்கிறது. இது நீதிமன்றத்தையும், நீதிபதிகளின் நற்பெயரையும் அரசு எப்படி கெடுக்கப் பார்க்கிறது என்பதற்கு உதாரணம்; அதுதான் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இது தவிர, நீதிபதிகளின் நோக்கம் பற்றிய கருத்து அல்ல.) அரசியல் ஆனது எப்போது ? இந்த விவகாரம் இப்போது பா.ஜ.க.வினால் அரசியல் ஆக்கப்படுகிறது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு. ஆனால், இது அரசியல் ஆனது இப்போது அல்ல.

குஜராத் தேர்தல் நடந்தபோது சோனியா காந்தி மிகவும் முனைந்து பிரச்சாரம் செய்தார்; சில தேர்தல் கணிப்புகள் மோடிக்கு எதிராக அமைந்ததால், அவருடைய ஆசை அதிகமாகியது. அந்த உற்சாகத்தில் அப்போது ‘மோடி மரணத்தின் வியாபாரி’ என்று சோனியா காந்தி பிரச்சாரம் செய்தார். இதை நியாயப்படுத்துவதற்காக சோராபுதீன் என்கௌன்டரை அவர் சுட்டிக் காட்டி, அது மோடி செய்த கொலை என்று பேசினார். அப்போது, சோராபுதீனை ஒரு அப்பாவியாக அவர் சித்தரித்தார். (நல்லவேளையாக அவரை ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியாக சோனியா காந்தி வர்ணிக்கவில்லை.) மக்கள் சோனியா காந்தியின் பிரச்சாரத்தை நிராகரித்தனர். சோராபுதீனை அப்பாவியாக அவர் சித்தரித்ததை மக்கள் ஏற்கவில்லை. மோடியை மரணத்தின் வியாபாரி என்று அவர் பேசியது, பின்னர் அவருக்கே சங்கடமான விஷயமாகப் போயிற்று. அப்போது அரசியல் ஆனதுதான் இந்த விவகாரமே தவிர, இப்போது பா.ஜ.க.வினால் இது அரசியல் ஆக்கப்படவில்லை.

இப்போது, ஸி.பி.ஐ. விசாரணை என்றவுடன், யாருக்குத் திருப்தி ஏற்படுகிறதோ இல்லையோ, சோனியா காந்திக்கு பெரும் திருப்தியாகத்தான் இருக்க முடியும். நானூறுக்கும் மேற்பட்ட என்கௌன்டர் புகார்கள் தேசிய மனித உரிமைக் கமிஷன் விசாரணையில் இருந்தபோதும், குஜராத் என்கௌன்டர் மட்டும் ஸி.பி.ஐ. விசாரணைக்குப் போகிறது என்றால் – குஜராத்தில் படுதோல்வி கண்ட காங்கிரஸ் கட்சியின் தலைவிக்கு – மோடியை மரணத்தின் வியாபாரி என்று சொல்லி, அது எடுபடாமல் போனதை பார்த்து சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட தலைவிக்கு – திருப்தி ஏற்படாமல் இருக்குமா என்ன?

யார் இந்த சோராபுதீன் ?

சரி, சோனியா காந்தியினாலும், அவரைத் தொடர்ந்து பல பத்திரிகைகளினாலும் ஒரு அப்பாவியாகக் கருதப்படுகிற இந்த சோராபுதீன் யார்? அவர் எப்படிப்பட்டவர்? சிலவிவரங்களைப் பார்ப்போம் :
பாகிஸ்தான் உளவுப் பிரிவின் ஏஜென்ட்; விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்; தாவூத் இப்ராஹிமின் வலதுகரமாகச் செயல்பட்டவர்; பல கொலைகளைச் செய்தவர்; மத்தியப் பிரதேசத்திலும், மஹாராஷ்டிரத்திலும், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் போலீஸால் தேடப்பட்டவர். இந்த ‘அப்பாவி’யின் பண்ணை சோதனையிடப்பட்டபோது, 22 ஏ.கே.56 துப்பாக்கிகள்; 22 கையெறி குண்டுகள்; ஏ.கே.56 துப்பாக்கிகளுக்கான 250 ரௌண்ட் ரவைகள்; பல குண்டுகளை உள்ளடக்கிய 81 மாகாசைன்கள்... போன்றவை கைப்பற்றப்பட்டன. இது பாகிஸ்தான் உளவுத் துறையினால், தாவூத் இப்ராஹிமின் உதவியுடன் சோராபுதீனுக்கு அனுப்பப்பட்டவை என்பது தெரிய வந்தது.

இப்பேர்ப்பட்ட ‘அப்பாவி’யின் செல்வாக்கு எப்படிப்பட்டது? இவர் ‘தடா’வில் கைதானார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானார். ஆனால், ஒரே வாரத்தில் ஜாமீனில் விடுதலை பெற்றார். அந்த விரைவு விடுதலையை அடுத்து, அவர் நேரத்தை வீணடிக்கவில்லை; பட்டப் பகலில், நடுத் தெருவில் மற்றொரு கொலையைச் செய்தார். இப்படிப்பட்டவரைத்தான் மஹாராஷ்டிர போலீஸ், ஆந்திரப் போலீஸ் ஆகியவற்றுடன் குஜராத் போலீஸும் துரத்திக் கொண்டிருந்தது.

என்கௌன்டர் போலிதான் !

இந்த போலீஸில் எந்த போலீஸ் சோராபுதீனை தீர்த்துக் கட்டுவது என்பதுதான் கேள்வியாக இருந்திருக்க முடியும். குஜராத் போலீஸ் தீர்த்துக் கட்டியது என்று நான் நினைக்கிறேன். ஒரு விஷயம் – குஜராத் அரசே கூட சோராபுதீன் கொல்லப்பட்ட என்கௌன்டர் போலி என்கௌன்டர்தான் என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டு விட்டது. (என்கௌன்டர்கள் என்பவை பற்றி என்னுடைய அபிப்பிராயம் என்ன என்பதை ஏற்கெனவே நான் தெளிவாக எழுதியிருக்கிறேன். அது வாசகர்களின் நினைவிற்காக இந்தக் கட்டுரையுடன் ஒரு பெட்டிச் செய்தியாக பிரசுரமாகியிருக்கிறது. வாசகர்கள் அதை மீண்டும் ஒரு முறை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

குஜராத்தில் சோராபுதீன் விவகாரத்தில் மட்டுமல்லாமல், மற்ற வன்முறை நிகழ்ச்சிகள், தீவிரவாத தாக்குதல்கள் போன்றவற்றில் கூட மிகத் திறமையாகச் செயல்பட்டு, குற்றவாளிகளைப் பிடித்த நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பலர், இப்போது சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று வருடங்களாக சிறையில் இருந்தும் ஜாமீன் கிடைக்கவில்லை. அது எப்படி கிடைக்கும்? அவர்கள் என்ன சோராபுதீன் மாதிரி அப்பாவிகளா? அவரை மாதிரி தேசத்திற்குத் தேவையானவர்களா? சோராபுதீன் மாதிரி செல்வாக்கு அவர்களுக்கெல்லாம் கிட்டி விடுமா என்ன – அவர்கள் கேட்டவுடன் ஜாமீன் பெறுவதற்கு? அவர்களுக்கெல்லாம் இப்போது இருப்பது, ஒரே ஒரு வழிதான். மோடிக்கு எதிராக - குஜராத் அரசுக்கு, எதிராக ஏதாவது வாக்குமூலம் தயாரித்து தந்தால் அவர்களுக்கு அப்ரூவர் அந்தஸ்தும், விடுதலையும் கிடைக்கலாம். மற்றபடி வேறு வழி இப்போதைக்குத் தெரியவில்லை.

ஆந்திரப் போலீஸின் பங்கு என்ன ?

இந்த மகாத்மா சோராபுதீனுக்காக பரிந்து கொண்டு பேசுகிறவர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான், சுப்ரீம் கோர்ட் ஸி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட்டது. ஆனால், அதிலும் ஒரு விநோதம். குஜராத் போலீஸ் வசமிருந்து இந்த விசாரணையை மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியதற்கு, அந்த நீதிமன்றமே சில காரணங்களைக் கூறியது. அதில் ஒரு காரணம், ‘ஆந்திரப் போலீஸில் 7 பேர் இந்த சோராபுதீன் விவகாரத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். சோராபுதீனைத் துரத்தி வந்த அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி குஜராத் போலீஸ் தங்கள் விசாரணையில் எதுவும் சொல்லவில்லை. ஆகையால், இதை மாற்றி ஸி.பி.ஐ.க்குக் கொடுக்கிறோம்’ என்று நீதிமன்றம் கூறியது. அதாவது, ‘ஆந்திரப் போலீஸின் பங்கு என்ன? என்பதை ஸி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும்; அதைப் பற்றிய அறிக்கை வேண்டும்’ என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இது ஸி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட்டதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று. ஆனால், ஸி.பி.ஐ. இப்போது ஆந்திரப் போலீஸ் பக்கமே போகவில்லை. அங்குதான் காங்கிரஸ் அரசு நடக்கிறதே? அவர்களைச் சங்கடப்படுத்தலாமா? ஆகையால் சுப்ரீம் கோர்ட் சுட்டிக்காட்டியும் கூட, ஆந்திரப் போலீஸ் சோராபுதீன் விவகாரத்தில் என்ன தொடர்பு கொண்டது என்பதைப் பற்றி ஸி.பி.ஐ. கொஞ்சம் கூட கவனிக்கவில்லை. இதிலிருந்தே இந்த விசாரணை முற்றிலும் அரசியல் ரீதியானதே என்பது தெளிவாகிறது
வந்தது புதிய குற்றச்சாட்டு!
இப்படியாகத்தானே ஸி.பி.ஐ. விசாரணை வந்து ஒரு சில மாதங்கள் ஆகியும் - அதற்கு முன்பு ஒரு சில வருடங்கள் கழிந்தும் – பணப் பறிப்பு சமாச்சாரத்திற்காகத்தான் சோராபுதீன் கொலை செய்யப்பட்டார் என்று யாருமே சொல்லவில்லை. மனித உரிமைக்காரர்கள் கூட இப்படி எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது ஆட்சியாளர்களுக்கே ஒரு விஷயம் தெளிவாகி விட்டது. காங்கிரஸ் முயன்றும் – சோனியா காந்தி பிரச்சாரம் செய்தும் – சோராபுதீன் அப்பாவி என்ற பொய் எடுபடவில்லை. ஆகையால், என்கௌன்டர், என்கௌன்டர் என்று காங்கிரஸ்காரர்கள் கத்தியபோது குஜராத் மக்கள், ‘யார் சம்பந்தப்பட்டது? தீவிரவாதிதானே? மிகப் பெரிய கிரிமினல் பேர்வழிதானே? சரி, சரி’ என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆகையால், குஜராத் அரசின் பெயரைக் கெடுப்பதற்கு வேறு ஒரு புதிய குற்றச்சாட்டுத் தேவைப்பட்டது.

பிறந்தது யோசனை. பணப்பறிப்பு! ‘பலாத்காரமாக பணத்தைப் பறிக்கிற தொழிலில் உள்ளவர்கள் மற்றும் பணத்தைப் பறி கொடுத்தவர்கள் – ஆகியோரிடையே மோதல் வந்தது. அதில் சிலருக்காக குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்திரவிட, குஜராத் போலீஸ் சோராபுதீனை கொலை செய்தது’ என்ற குற்றச்சாட்டு பிறந்தது. அதாவது, பல ஐ.பி.எஸ். அதிகாரிகள், அவர்களைத் தவிர சில உயரதிகாரிகள், உள்துறை அமைச்சர் ஆகிய எல்லோரும் சேர்ந்து சோராபுதீனை பணப் பறிப்பு சமாச்சாரத்திற்காக கொன்று போட்டு விட்டார்கள். இதை நம்ப வேண்டுமென்றால், இதுவரை சட்டமோ, நீதிமன்றமோ கண்டிராத அளவுக்கு அசைக்க முடியாத சாட்சியங்கள் தேவைப்படுமே?

சாட்சியத்தின் லட்சணம் !

ஆனால், கிடைத்த சாட்சியம் என்ன? ஒரு நிலப் பறிப்பு மோசடி ஆசாமி - மகனைக் கொலை செய்து விட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்; நிலப் பறிப்பிலேயே ஊறிப் போய் சிறையில் உள்ளவர் இன்னொருவர். இந்த இரண்டு பேர்தான் அமைச்சர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி ‘இது பணப்பறிப்பு சமாச்சாரம்’ என்று கூறிவிட்டார்கள் (கூறினார்களா, கூற ஒப்புக் கொண்டார்களா – என்பது பிறகு எப்போதாவது தெளிவாகலாம்). இவர்களோடு ஏற்கெனவே சிறையில் உள்ள – வெளியே வர வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிற –ஒரு குற்றமும் செய்யாத போலீஸ் காரர் ஒருவர் அப்ரூவராகி விட சம்மதித்து இருக்கிறார். இப்படிப்பட்ட சாட்சியங்களைக் கொண்டு, இந்த வழக்கு பதிவாகிறது.

சரி, இந்த மாதிரி ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நிற்குமா? – என்று கேட்கலாம். நிற்காது. நிற்காவிட்டால் போகட்டுமே! வழக்கு நிற்க வேண்டும் என்று என்ன அவசியம்? வழக்கு முடிவதற்கும், தீர்ப்பு வருவதற்கும் சில வருடங்கள் ஆகிவிடுமே? அதற்குள் பத்திரிகைகளின் உதவியுடன், ‘குஜராத்தில் போலி என்கௌன்டர்... பணப் பறிப்பு விவகாரத்தில் – போலீஸாரைத் தூண்டி கொலை செய்தவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா... அவருக்கும் தலைமைக் கொலையாளியாகச் செயல்பட்டவர் நரேந்திர மோடி...’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, நாடு முழுவதும் மோடியையும், அவருடைய அமைச்சர்களையும் கொலைகாரர்களாக சித்தரித்து விடலாமே?அதற்குப் பிறகு வழக்கு நிற்காமல் போனால் போகட்டுமே! அவதூறு நிற்குமே! அது போதுமே – மோடியையும், குஜராத்தையும் மட்டுமல்லாமல், பா.ஜ.க.வையே தள்ளி வைப்பதற்கு!
ஓடி ஒளிந்தாரா, அமைச்சர் ?
அமித்ஷா கைதான விதமே, இந்த விசாரணை எவ்வளவு பெரிய கேலிக்கூத்து என்பதைத் தெளிவாக்குகிறது. முதலில் சில நாட்கள் பத்திரிகைகளில் ‘வதந்திகள்’; அமித்ஷா கைதாகப் போகிறார்; எந்த நிமிடமும் அமைச்சர் கைது...
இப்படி பத்திரிகைகளில் வதந்திகளும், வதந்திகளே செய்திகளாகவும் வெளிவரத் தொடங்கிய உடனே, ஸி.பி.ஐ.க்கு அமைச்சர் அமித்ஷா கடிதம் எழுதி, ‘என்னை விசாரிக்கப் போகிறீர்களா? அப்படியானால் எனக்கு சம்மன் அனுப்புங்கள்’ என்று கோரினார். ஒரு பதிலும் இல்லை. சுமார் பத்து தினங்கள் கழித்து – அமித்ஷாவிடம் சில கேள்விகள் கேட்க விரும்புவதாகக் கூறி, ஸி.பி.ஐ. அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தானாக வலுவில் விசாரணைக்கு முன்வந்தபோது, பதிலே தராத ஸி.பி.ஐ. – இப்போது நோட்டீஸ் அனுப்பியதாலும், பத்திரிகைகளில் ஏற்கெனவே கைது என்று வதந்தி வந்ததாலும், ஸி.பி.ஐ.யின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள அமித்ஷா நேரம் எடுத்துக் கொள்கிறார். உடனே ‘அவர் தலைமறைவு’ என்று பத்திரிகைகளில் செய்தி வந்து விட்டது. இதற்குப் பின்னர் அமித்ஷா, கேள்வி கேட்கப்படுவதற்காக ஸி.பி.ஐ.யின் முன்னால் ஆஜரானார். ஸி.பி.ஐ. அவரை ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. கைது செய்தது.

அடுத்த தினமே சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை அவர் மீது தாக்கலாகி விட்டது. இது எப்படி? இது என்ன மேஜிக்? குற்றம்சாட்டப்பட்டவர் விசாரிக்கப்படவேயில்லை. விசாரிக்க வேண்டும் என்று ஸி.பி.ஐ. கூறி நான்கு நாட்கள் ஆகின்றது. அதற்குள் அவரைப் பற்றி ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை ரெடி! இது நம் நாட்டிலேயே குற்ற விசாரணை விஷயத்தில் சாதனை படைத்திருக்கிற நிகழ்ச்சி. இதற்குப் பின்னர், நீதிமன்றக் காவலில் அமித்ஷாவை வைத்து பெயருக்கு அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

இர்ஷாத் ஜஹான் கதை ஒன்று போதாதா?

‘தீவிரவாதிகள் விஷயத்தில் கூட, இப்படி மத்திய அரசைப் பற்றி சந்தேகப்படுவது நியாயமா?’ - என்று சிலர் மனதிலாவது கேள்வி எழுந்தால், அவர்கள் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்த்தால் போதும். இர்ஷாத் ஜஹான் என்கிற பெண்மணி குஜராத்தில், ஒரு என்கௌன்டரில் பலியானவர். இதற்காக குஜராத் அரசு மீது பெரிய புகார் எழுந்தது. இர்ஷாத் ஜஹான் எந்தப் பாவமும் அறியாத ஒரு சாதாரண பெண்மணி என்று செய்திகள் வெளியாயின
அப்போது குஜராத் போலீஸ், நீதிமன்றத்தில், ‘அந்தப் பெண்மணி ஒரு தீவிரவாதி, லஷ்கர்-இ-தெய்பாவுடன் தொடர்பு உள்ளவர்’ என்று கூறியது. லஷ்கர் - இ- தொய்பா என்ன செய்தது? ‘எங்களுடைய முதல் பெண் தியாகி இவர்’ என்று கூறி இர்ஷாத் ஜஹானைப் பெருமைப்படுத்தியது! அவர் மரணத்தை ஒரு வீரச் செயலாகப் போற்றியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு வேறு வழியில்லாமல், நீதிமன்றத்தில் ‘இர்ஷாத் ஜஹான் தீவிரவாதிதான்’ என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
இதற்கிடையே, மனித உரிமைக்காரர்கள் இர்ஷாத் ஜஹான் என்கௌன்டர் பற்றி பெரிய அளவில் புகார்கள் கிளப்பி, அவர் தீவிரவாதியே அல்ல என்று வாதாடி ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். பார்த்தது லஷ்கர்-இ-தொய்பா! தன் நிலையை அது மாற்றிக் கொண்டது. ‘அந்தப் பெண்மணி எங்கள் இயக்கத்தைச் சார்ந்தவரே அல்ல’ என்று அறிவித்து விட்டது. ஏன்? அப்போதுதான் குஜராத் அரசு மீது பழி பெரிதாக விழும் என்பதால்! உடனே மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டில் புதிய பிரமாணம் தாக்கல் செய்தது: ‘முன்பு நாங்கள் செய்த சத்தியம் தவறு, இர்ஷாத் ஜஹான் தீவிரவாதி அல்ல’ என்று மத்திய அரசு கூறிவிட்டது. லஷ்கர் - இ- தொய்பா எவ்வழி, மத்திய அரசு அவ்வழி என்பதுபோல் ஆகிவிட்டது.

இத்தனைக்கும், இர்ஷாத் ஜஹானுடன் சேர்ந்து பலியானவர்களில் இருவர் பாகிஸ்தானியர்கள் – அது அவர்களிடமிருந்த பாஸ்போர்ட் முதலானவற்றால் தெளிவாகியது. அதாவது, பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு உள்ளவர் இர்ஷாத் என்பது தெளிவு. இப்படிப்பட்டவருக்கு வக்காலத்து வாங்கியது மத்திய அரசு! இப்படி நிகழ்ந்தவுடன் ஸி.பி.ஐ. விசாரணை என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அதுதான் ஸி.பி.ஐ. இருக்கவே இருக்கிறதே – காங்கிரஸுக்கு ஏவல் புரிய! அது தயாராகத்தான் இருந்திருக்கும். ஆனால், அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம்
அமெரிக்காவில் விசாரிக்கப்பட்ட தீவிரவாதி ஹெட்லி, ‘இர்ஷாத் ஜஹான் என்கிற பெண்மணிலஷ்கர் - இ- தொய்பாவைச் சார்ந்தவர்தான்’ என்று அடித்துக் கூறி, சாட்சியம் அளித்து விட்டார்.

அவர் இப்படிக் கூறியது, இந்திய விசாரணை அதிகாரிகளிடம்! அமெரிக்க அதிகாரிகளிடம் சொல்லியிருந்தாலாவது, ‘தெரியவில்லை – விசாரிக்க வேண்டும்..’ என்று ஏதாவது சொல்லி மழுப்பியிருக்கலாம். ஆனால் இந்திய அதிகாரிகளிடமே அவர், இப்படிப் போட்டு உடைத்து விட்டதால், மத்திய அரசுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. முழிக்கிறது. சரி, பரவாயில்லை. சோராபுதீனை கையில் வைத்துக் கொண்டு குஜராத் அரசை ஒரு கை பார்ப்போம் என்று இப்போது முனைந்திருக்கிறது. அதற்கு ஸி.பி.ஐ. ஏவல் புரிகிறது.

சோனியாவின் சித்தம், ஸி.பி.ஐ.யின் பாக்கியம்!

ஸி.பி.ஐ. மத்திய அரசின் அடியாளாக மாறி வெகு காலமாகி விட்டது. நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவு தேவை என்றால் கூட, ஸி.பி.ஐ. பயன்படுத்தப்படுகிறது. சிலர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று, அது மத்திய அரசுக்கு ஆதரவு தேடிக் கொடுக்கிறது.

அல்லது காங்கிரஸுக்கு எதிராகச் செயல்படுகிறவர் மீது வழக்குப் பதிவு செய்து, மிரட்டி பணிய வைக்கிறது. இதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயங்களாகி விட்டன. க்வாட்ரோக்கி விவகாரம் ஒன்று போதாதா – ஸி.பி.ஐ.யின் லட்சணத்தை நாம் புரிந்து கொள்ள? சோனியா காந்தியின் சித்தம் ஸி.பி.ஐ.யின் பாக்கியம். இப்படிப்பட்ட ஒரு அமைப்பு குஜராத் விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்பது அசட்டுத்தனம்.

காங்கிரஸுக்கு குஜராத் மட்டும் குறியல்ல. நாளைய தேர்தல்களில் பா.ஜ.க.வை பயங்கரமாக வீழ்த்த வேண்டும். இன்னும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத், கர்நாடகம், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் நல்ல பலமும்; பஞ்சாப், மஹாராஷ்டிரம், பீகார் போன்ற மாநிலங்களில் கணிசமான பலமும் கொண்டு திகழ்கிற பா.ஜ.க.வை வீழ்த்த சரியான ஆயுதம் தேவை. அது தவிர, இந்தியாவிலேயே மிகச் சிறந்த நிர்வாகத்தைத் தருகிறார் என்ற பெயரையும், அப்பழுக்குச் சொல்ல முடியாத நேர்மையாளர் என்கிற பெயரையும் பெற்று, தேசிய அளவில் அனைவர் கவனத்தையும் கவர்ந்து வருகிற நரேந்திர மோடியின் பெயரையும் நாசமாக்க வேண்டும். இதற்கான முயற்சிதான் இப்போது நடக்கிற ஸி.பி.ஐ. நாடகம்.
வெறும் அரசியல் ஆதாயத்திற்காக – மோடியையும், பா.ஜ.க.வையும் ஒடுக்குவதற்காக – காங்கிரஸ் தலைமையின் கட்டளையின் பேரில், ஸி.பி.ஐ. நடத்துகிற இன்றைய கூத்து, எதிர்காலத்தில், விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்தும். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட மட்டும் அல்ல – அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவும் கூட – போலீஸார் தயங்குவார்கள். ‘நமக்கேன் வம்பு?’ என்று ஒதுங்குவார்கள்.
ஆட்சியாளர்கள் கூட, நாளை நமக்கு ஏதாவது அவதூறும், வழக்கும் வருமோ – என்று கவலைப்படுவார்கள். ஆக, தீவிரவாதிகளுக்கு, ‘உங்கள் மீது நடவடிக்கை வராது’ என்ற உத்திரவாதம் அளித்தது போல் ஆகிவிடும். இதை மக்கள் புரிந்து கொண்டால் பா.ஜ.க.விற்கு இப்போது தரப்படுகிற ஆதரவு பல மடங்காகப் பெருகி, மத்திய அரசின் விபரீதமான போக்கிற்குத் தடை போட முடியும்.

மக்கள் விழித்துக் கொண்டால்....!

நேர்மையாக, மிகத் திறமையுடன் ஒரு ஆட்சியை நடத்த முடியும் என்று நிரூபித்து வருகிறவர் நரேந்திர மோடி. நேர்மையும், திறமையும் தங்களுக்குப் பெரும் பகை என்று நினைக்கிற காங்கிரஸ், மோடி மீது கொண்டுள்ள துவேஷம் இப்போது குஜராத்தைச் சுடுகிறது. அடுத்து, இது நேர்மையான அரசியலையே சுடும். மக்கள் விழித்துக் கொள்வதுதான் இதைத் தவிர்க்க ஒரே வழி.
 
-- thukluk 10.08.2010..

0 comments :

Post a Comment