ஓசூர் : ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், "பந்த்' போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், "இயேசு விடுவிக்கிறார்' என்ற கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகிறது. அதன் தலைவரும், மத போதகருமான மோகன்.சி.லாசரஸ், கிளை அமைப்புகளை நிறுவி, கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும் நான்கு நாள் தங்கி மத பிரசாரம் செய்யும் இவர், இரவில் ஜெப கூட்டமும், பகலில் வீடு சந்திப்பு என, குடும்ப ஜெபமும் செய்கிறார். இவரது ஜெபம் மூலம் பல்வேறு மதத்தினர் மதம் மாறி, கிறிஸ்தவ அமைப்புகளில் சேர்கின்றனர்.
ஓசூர் ஹேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் முதல், பெருவிழா ஜெப கூட்டம் நடக்கிறது. ஓசூர் டவுன், மத்திகிரி, பாகலூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. மத பிரசாரம் என்ற பெயரால், இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக, இந்து அமைப்புகள் சார்பில் புகார் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், மத பிரசாரம் மற்றும் மத மாற்றத்தைக் கண்டித்து, ஓசூரில் நேற்று, அரை நாள், "பந்த்'க்கு அழைப்பு விடுத்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு, பஜ்ரங்தள் நகர தலைவர் விஷ்ணுகுமார் தலைமையில் இந்து அமைப்பினர், நேற்று முன்தினம் மாலை, வீதி, வீதியாகச் சென்று, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், "பந்த்'க்கு ஆதரவு கேட்டனர். இந்து அமைப்புகளின், "பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்து, ஓசூர் நகர் முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன.
டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, ஒவ்வொரு நூறு அடிக்கும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்தனர். ரயில்வே ஸ்டேஷன், தாசில்தார் அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், மூன்று பேர் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். இந்து அமைப்பினர் மூன்று கடைகளை அடைக்க கூறியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கடைகளை சிலர் சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் ஜனபர் பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் (31), மத்திகிரி நகர விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுமன் (24), ஓசூர் நகர அமைப்பாளர் வெங்கடேஷ் (28), நாகராஜ் (25), மூர்த்தி (28) ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். தகவலறிந்த பா.ஜ., மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினரும், இந்து அமைப்பினரும் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் முற்றுகையிட்டு, கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தினர். மதியம் 1 மணிக்கு பின், வழக்கம் போல் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு கூறுகையில், "ஓசூர் தாலுகா பகுதியில், இந்துக்களை மதமாற்றம் செய்வதைக் கண்டித்து, அமைதியான முறையில் "பந்த்' நடத்தப்பட்டது. மூளை சலவை செய்து, மதமாற்றம் செய்ய தூண்டுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.






டியர் சாரு,
உங்களிடம் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம்.  விஜய் டி.வி.யின் நீயா நானா குழுவில் பணியாற்றுபவர்களில் நானும் ஒருவன்.  என் பெயரை தயவு செய்து வெளியிட வேண்டாம்.
நீயா நானாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஆண்டனி கருப்பாக இருப்பவர்களை குரங்கு மூஞ்சி என்று குறிப்பிடுவது பற்றி எழுதியிருந்தீர்கள்.  உண்மை நிலவரம் தெரிந்தால் என்ன எழுதுவீர்களோ தெரியாது.  நிறத்தையும் உருவத்தையும் வைத்து ஏளனம் செய்தால் ஐரோப்பாவில் அதை இனவாதம் என்று சொல்லி ஜெயிலில் போட்டு விடுவார்கள்.  இங்கே ஆண்டனி செய்வது அது மட்டும் அல்ல.  கிட்டத்தட்ட ஒரு மத வெறியரைப் போல் அவர் நடந்து கொள்கிறார்.  முக்கியமாக இந்து மற்றும் இஸ்லாம் மீது தன் மீடியாவை வைத்து பிரச்சினை கொடுக்கிறார்.
சில உதாரணங்கள்:
சில மாதங்களுக்கு முன்பு முஸ்லீம் பெண்கள் பர்தா அணியலாமா கூடாதா என்று ஒரு டாக் ஷோவுக்குத் திட்டமிடப் பட்டு, இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பால் அது கை விடப் பட்டது. பர்தா அணியலாமா கூடாதா என்று சொல்ல அல்லது விவாதிக்க ஆண்டனி யார் என்பது என் கேள்வி.
சென்ற வாரம் – அதாவது, நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஷூட் செய்வதற்கு மறுநாள் ஒரு டாக் ஷோவை ஷூட் செய்ய இருந்தோம்.  பொது இடங்களில் மக்கள் மத அடையாளத்துடன் வரலாமா கூடாதா என்பதே விவாதத்தின் தலைப்பு.  இதிலிருந்தே நீங்கள் ஆண்டனி என்பவரின் இந்து விரோதப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.  மத அடையாளம் என்றால் என்ன? நெற்றியில் விபூதியோ, ஸ்ரீசூர்ணமோ அணியலாமா கூடாதா என்பதே அந்தத் தலைப்பின் உள்குத்து.  இதை விவாதிக்க இந்த ஆண்டனி என்பவர் யார்?  இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் ஒரு ஆன்மீக அடையாளத்தைப் பற்றி பணம் பண்ணுவதற்காகவும், தன் டாக் ஷோவை பிரபலப் படுத்துவதற்காகவும் தவறாகப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல ஆண்டனியின் நோக்கம்.  இந்து மதத்தின் மீது மற்றவர்களுக்கு துவேஷத்தை ஏற்படுத்துவதே அந்தத் தலைப்பின் நோக்கமாக இருந்தது.  மத அடையாளம் என்றால் அது நேரடியாக இந்து மதத்தைத் தாக்குவதே ஆகும்.   ஏனென்றால், ஒருவரின் மத அடையாளத்தை அவருடைய வர்க்க பேதம் எதுவும் இல்லாமலேயே உடனே தெரிந்து கொள்ளக் கூடியவர்கள் சீக்கியர்கள்.  அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.  அதனால்தான் அந்த விவாதத் தலைப்பு இந்துக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிறேன்.
இந்த டாக் ஷோவில் உங்கள் நண்பர் மனுஷ்ய புத்திரனும் பிரதம விருந்தாளியாக கலந்து கொள்ள இருந்தார்.  உன்னைப் போல் ஒருவன் என்ற இஸ்லாமிய விரோதப் படத்தில் பாட்டு எழுதியதற்காக அவரையும் மன்னிப்புக் கேட்க வைப்பதற்காக அழைத்தார்களா என்று தெரியவில்லை.  ஆனால் அவர் உங்களைப் போல் வெகுளி அல்ல.  நிச்சயம் அன்றைய தினம் கோபியின் விழிகள் பிதுங்கி இருக்கும்.  மனுஷ்ய புத்திரனின் விவாதத் திறமையும் கூரிய புத்தியும் உயிர்மையின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகின்றன.  (ஆமாம், நான் உயிர்மையின் நீண்ட நாள் வாசகன்).
ஆனால் இந்த டாக் ஷோ ரத்து செய்யப்பட்டு விட்டது;  ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால்.
நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை மீண்டும் சற்று கவனித்துப் பாருங்கள்.  ஒருவர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்.  அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது.  இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் அவர் சேர்க்கப்பட்டதன் காரணம், அவர் ஆண்டனியின் பினாமி.  அவர் என்ன சொன்னார் பார்த்தீர்களா? கிறிஸ்தவ மதத்தில் நித்யானந்தா போன்ற போலிகள் இல்லை என்றார்.  பிறகு பவா செல்லத்துரை கண்டனம் செய்ததால் “அங்கேயும் சில பாதிரியார்கள் தவறு செய்கிறார்கள்” என்று ஒத்துக் கொண்டார்.  ‘நாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளை மட்டும் தாக்கவில்லை; பொதுவாகத்தான் இருக்கிறோம்’ என்று போலியாகக் காண்பித்துக் கொள்வதற்காகவே தமிழ் பேசத் தெரியாத அந்த நபர் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டார்.
நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் ஆண்டனி இந்து மற்றும் இஸ்லாமுக்கு எதிராகவே தொடர்ந்து நடந்து கொள்கிறார்.  இதை உங்கள் இணைய தளம் பகிரங்கப் படுத்த வேண்டும்.
அன்புடன்,
… … …
விஜய் டி.வி.யின் ஹிந்து எதிர்ப்பு


எழுத்தாளர் சாரு நிவேதிதா; 'நீயா நானா' கோபிநாத் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆண்டனியால் தான் எப்படி அவமானப்பட்டேன் என்பது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை.............
உங்கள் பார்வைக்கு....



மன்னிப்புக் கேள்!

மன்னிப்புக் கேள்!
June 1st, 2010
மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன்.
இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத் தலைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது. இத்தலைப்பின் உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப் பற்றி ஒரு டாக் ஷோ செய்ய வேண்டும் என்பதுதான். அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஆண்டனி. இதை அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான் என்னால் உணர முடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீது இருந்த பகையை இந்த நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது.
கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.
என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். அதனாலேயே நண்பர்கள் என்னை ட்யூப் லைட் என்பார்கள்.
நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்று கவனித்தால் தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான். அதை இயக்குபவர் ஆண்டனி.
அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக கெரில்லாத் தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்து விழுந்தது. “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள் என்றீர்கள். அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின் பின்னால் போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசை திருப்பியதற்காக வருத்தப்படுகிறீர்களா?” கொஞ்சம் திகைத்துப் போன நான் ”ஆமாம்” என்றேன். விடாமல் தொடர்ந்து ”அதற்காக உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி. எனக்கு அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்? அப்படியே புரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? மேலும், நான் என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக் கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்து கொண்டார் என்ற காரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின் பார்ட்னரா? எனக்கும் அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது?
ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான் ”நித்யானந்தாவை நம்பி ஏமாந்த கதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன். ஆனால் கோபிநாத் மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை முட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி. கிட்டத்தட்ட ஒரு கொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத் தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள். இது சம்பந்தமாக என் வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையைப் பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னை அடித்தார்கள். பவா ஒரு கம்யூனிஸ்ட். அவரும் நீயா நானா கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு நான் வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார்.
ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடுமா? ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள். பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம் செய்து கொண்டவன் என்று. தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்து விடுகிறாள். என்னுடைய நிலைமையும் அதுதான். நித்தி தன்னை சாமி என்றார். எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும். மேலும், மிக வெகுளியான ஒரு ஆள் நான். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன். ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத் தோன்றும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான் நம்புவேன். அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா? அதனால்தான் நித்தியை நம்பினேன்.
இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்தி அல்லவா எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?
உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன். ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான் என் பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அதில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம்.
பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் ரஷ்யா வீழ்ந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறது புள்ளிவிபரம். ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிசத்தால் ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின் சீனாவிலும் 60 லட்சம். கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.
இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காக யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா? போலிச் சாமியார்கள் ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள் சுயநலத்துக்காக மக்களை ஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று சக மனிதர்களைக் கொல்லவில்லையே?
தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரை நாம் நம்புகிறோம். பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம் ஒரு அனுபவமாகக் கொள்கிறோம். அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில் நித்தியின் தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. நித்தியை குமுதம் சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும், நித்தியின் பிரசங்கம் விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது. ஆக, நித்தியை பிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும் சொல்வார்களா? சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டு கிழிந்தால் இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய தொகை கிடைக்காமல் போகும். அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள் வாய் திறக்க மாட்டார்கள். எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான் தமது கோரைப் பற்களைக் காட்டுவார்கள்.
மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும் பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு தத்துவத்தையோ ஒரு நபரையோ நாம் நம்புகிறோம். பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்த தோற்றம் பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம். அதைத்தான் குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம். இதில் மன்னிப்புக் கேட்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை.
ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது. டி.வி.யில் முகம் தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இது என்று இந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.
(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்).
1.6.2010.
10.07 a.m.