டியர் சாரு,
உங்களிடம் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம்.  விஜய் டி.வி.யின் நீயா நானா குழுவில் பணியாற்றுபவர்களில் நானும் ஒருவன்.  என் பெயரை தயவு செய்து வெளியிட வேண்டாம்.
நீயா நானாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஆண்டனி கருப்பாக இருப்பவர்களை குரங்கு மூஞ்சி என்று குறிப்பிடுவது பற்றி எழுதியிருந்தீர்கள்.  உண்மை நிலவரம் தெரிந்தால் என்ன எழுதுவீர்களோ தெரியாது.  நிறத்தையும் உருவத்தையும் வைத்து ஏளனம் செய்தால் ஐரோப்பாவில் அதை இனவாதம் என்று சொல்லி ஜெயிலில் போட்டு விடுவார்கள்.  இங்கே ஆண்டனி செய்வது அது மட்டும் அல்ல.  கிட்டத்தட்ட ஒரு மத வெறியரைப் போல் அவர் நடந்து கொள்கிறார்.  முக்கியமாக இந்து மற்றும் இஸ்லாம் மீது தன் மீடியாவை வைத்து பிரச்சினை கொடுக்கிறார்.
சில உதாரணங்கள்:
சில மாதங்களுக்கு முன்பு முஸ்லீம் பெண்கள் பர்தா அணியலாமா கூடாதா என்று ஒரு டாக் ஷோவுக்குத் திட்டமிடப் பட்டு, இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பால் அது கை விடப் பட்டது. பர்தா அணியலாமா கூடாதா என்று சொல்ல அல்லது விவாதிக்க ஆண்டனி யார் என்பது என் கேள்வி.
சென்ற வாரம் – அதாவது, நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஷூட் செய்வதற்கு மறுநாள் ஒரு டாக் ஷோவை ஷூட் செய்ய இருந்தோம்.  பொது இடங்களில் மக்கள் மத அடையாளத்துடன் வரலாமா கூடாதா என்பதே விவாதத்தின் தலைப்பு.  இதிலிருந்தே நீங்கள் ஆண்டனி என்பவரின் இந்து விரோதப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.  மத அடையாளம் என்றால் என்ன? நெற்றியில் விபூதியோ, ஸ்ரீசூர்ணமோ அணியலாமா கூடாதா என்பதே அந்தத் தலைப்பின் உள்குத்து.  இதை விவாதிக்க இந்த ஆண்டனி என்பவர் யார்?  இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் ஒரு ஆன்மீக அடையாளத்தைப் பற்றி பணம் பண்ணுவதற்காகவும், தன் டாக் ஷோவை பிரபலப் படுத்துவதற்காகவும் தவறாகப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல ஆண்டனியின் நோக்கம்.  இந்து மதத்தின் மீது மற்றவர்களுக்கு துவேஷத்தை ஏற்படுத்துவதே அந்தத் தலைப்பின் நோக்கமாக இருந்தது.  மத அடையாளம் என்றால் அது நேரடியாக இந்து மதத்தைத் தாக்குவதே ஆகும்.   ஏனென்றால், ஒருவரின் மத அடையாளத்தை அவருடைய வர்க்க பேதம் எதுவும் இல்லாமலேயே உடனே தெரிந்து கொள்ளக் கூடியவர்கள் சீக்கியர்கள்.  அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.  அதனால்தான் அந்த விவாதத் தலைப்பு இந்துக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிறேன்.
இந்த டாக் ஷோவில் உங்கள் நண்பர் மனுஷ்ய புத்திரனும் பிரதம விருந்தாளியாக கலந்து கொள்ள இருந்தார்.  உன்னைப் போல் ஒருவன் என்ற இஸ்லாமிய விரோதப் படத்தில் பாட்டு எழுதியதற்காக அவரையும் மன்னிப்புக் கேட்க வைப்பதற்காக அழைத்தார்களா என்று தெரியவில்லை.  ஆனால் அவர் உங்களைப் போல் வெகுளி அல்ல.  நிச்சயம் அன்றைய தினம் கோபியின் விழிகள் பிதுங்கி இருக்கும்.  மனுஷ்ய புத்திரனின் விவாதத் திறமையும் கூரிய புத்தியும் உயிர்மையின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகின்றன.  (ஆமாம், நான் உயிர்மையின் நீண்ட நாள் வாசகன்).
ஆனால் இந்த டாக் ஷோ ரத்து செய்யப்பட்டு விட்டது;  ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால்.
நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை மீண்டும் சற்று கவனித்துப் பாருங்கள்.  ஒருவர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்.  அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது.  இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் அவர் சேர்க்கப்பட்டதன் காரணம், அவர் ஆண்டனியின் பினாமி.  அவர் என்ன சொன்னார் பார்த்தீர்களா? கிறிஸ்தவ மதத்தில் நித்யானந்தா போன்ற போலிகள் இல்லை என்றார்.  பிறகு பவா செல்லத்துரை கண்டனம் செய்ததால் “அங்கேயும் சில பாதிரியார்கள் தவறு செய்கிறார்கள்” என்று ஒத்துக் கொண்டார்.  ‘நாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளை மட்டும் தாக்கவில்லை; பொதுவாகத்தான் இருக்கிறோம்’ என்று போலியாகக் காண்பித்துக் கொள்வதற்காகவே தமிழ் பேசத் தெரியாத அந்த நபர் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டார்.
நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் ஆண்டனி இந்து மற்றும் இஸ்லாமுக்கு எதிராகவே தொடர்ந்து நடந்து கொள்கிறார்.  இதை உங்கள் இணைய தளம் பகிரங்கப் படுத்த வேண்டும்.
அன்புடன்,
… … …

0 comments :

Post a Comment