ஓசூர் : ஓசூரில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடக்கும் கட்டாய மதமாற்றத்தைக் கண்டித்து, அரை நாள், "பந்த்' போராட்டத்தை இந்து அமைப்புகள் நடத்தின. தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில், "இயேசு விடுவிக்கிறார்' என்ற கிறிஸ்தவ அமைப்பு செயல்படுகிறது. அதன் தலைவரும், மத போதகருமான மோகன்.சி.லாசரஸ், கிளை அமைப்புகளை நிறுவி, கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும் நான்கு நாள் தங்கி மத பிரசாரம் செய்யும் இவர், இரவில் ஜெப கூட்டமும், பகலில் வீடு சந்திப்பு என, குடும்ப ஜெபமும் செய்கிறார். இவரது ஜெபம் மூலம் பல்வேறு மதத்தினர் மதம் மாறி, கிறிஸ்தவ அமைப்புகளில் சேர்கின்றனர்.
ஓசூர் ஹேம்பிரிட்ஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் முதல், பெருவிழா ஜெப கூட்டம் நடக்கிறது. ஓசூர் டவுன், மத்திகிரி, பாகலூர் மற்றும் சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில், பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து, பேனர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. மத பிரசாரம் என்ற பெயரால், இந்துக்களை கட்டாய மதமாற்றம் செய்வதாக, இந்து அமைப்புகள் சார்பில் புகார் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில், மத பிரசாரம் மற்றும் மத மாற்றத்தைக் கண்டித்து, ஓசூரில் நேற்று, அரை நாள், "பந்த்'க்கு அழைப்பு விடுத்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு, பஜ்ரங்தள் நகர தலைவர் விஷ்ணுகுமார் தலைமையில் இந்து அமைப்பினர், நேற்று முன்தினம் மாலை, வீதி, வீதியாகச் சென்று, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், "பந்த்'க்கு ஆதரவு கேட்டனர். இந்து அமைப்புகளின், "பந்த்'துக்கு ஆதரவு தெரிவித்து, ஓசூர் நகர் முழுவதும் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன.
டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க, ஒவ்வொரு நூறு அடிக்கும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்தனர். ரயில்வே ஸ்டேஷன், தாசில்தார் அலுவலகம், புது பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில், மூன்று பேர் கடைகளை திறந்து வியாபாரம் செய்தனர். இந்து அமைப்பினர் மூன்று கடைகளை அடைக்க கூறியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், கடைகளை சிலர் சேதப்படுத்தினர்.
இது தொடர்பாக, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் ஜனபர் பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் (31), மத்திகிரி நகர விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சுமன் (24), ஓசூர் நகர அமைப்பாளர் வெங்கடேஷ் (28), நாகராஜ் (25), மூர்த்தி (28) ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். தகவலறிந்த பா.ஜ., மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினரும், இந்து அமைப்பினரும் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன் முற்றுகையிட்டு, கைதானவர்களை விடுவிக்க வலியுறுத்தினர். மதியம் 1 மணிக்கு பின், வழக்கம் போல் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
விஸ்வ ஹிந்து பரிஷத் நகர தலைவர் நாகு கூறுகையில், "ஓசூர் தாலுகா பகுதியில், இந்துக்களை மதமாற்றம் செய்வதைக் கண்டித்து, அமைதியான முறையில் "பந்த்' நடத்தப்பட்டது. மூளை சலவை செய்து, மதமாற்றம் செய்ய தூண்டுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


0 comments :

Post a Comment